எரேமியா 10
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2
ஆஃப்பிரிக்க தேனீக்கள் அதிக வெறியுடன் மக்களைத் துரத்தித் துரத்திக் கொட்டக்கூடியவைகள். சாதாரண தேனீக்களுடன் கலந்தால் பின்னர் மென்மையாக மாறிவிடும் என்று நினைத்த ஆராய்ச்சியாளர்கள் மற்ற இனத் தேனீக்களுடன் அவற்றைக் கலக்கவிட்டார்கள். புதிதாக வந்த கலப்பினத் தேனீக்கள் சிறிது காலம் மட்டுமே அமைதியாக இருந்தன. மீண்டும் காட்டுக்குள் போய் பழைய கூட்டத்துடன் கலந்தபின் பழைய மூர்க்கம் வந்துவிடுகிறது. அவற்றின் மரபணுக்களில் இருக்கும் குணமானது கலப்பினால் முழுவதுமாக மாறுவதில்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
மார்க்கம் அல்லது மதம் என்பது சமுதாயத்தின் மரபணுக்களில் ஒன்றாகும். நாம் பிறந்ததில் இருந்து நமக்குள் ஊட்டப்படும் விதிகள், கொள்கைகள், நற்குணங்கள் யாவுமே நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கின்றன. ஆனால் நாம் பிறருடன் பழகும் போது அவர்களது நல்ல குணங்களைவிட கெட்ட குணங்களையே அதிகம் கற்றுக் கொள்வோம். இது மனித இயல்பு. இஸ்ரவேல் மக்களைத் தமது வேதாகமம், அற்புதங்கள், வழிநடத்துதல் மூலம் தமக்கு என்று வைத்திருந்த கடவுள், அவர்கள் மற்ற நாட்டுமக்களின் தீய குணங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது என்று அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார். ஆனால் புறஜாதிகளை நல்ல வழியில் நடத்த வேண்டிய இஸ்ரவேலர் அவர்களது தீய வழிகளைக் கற்றுக் கொண்டார்கள்.
”அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.” இதைப் புரிந்து கொள்ளாத இஸ்ரவேலர் உருவாக்கப்ப்ட்டவைகளைக் கண்டு கலங்கிப் போய் இருந்தார்கள்.
சிந்தனை : ஆண்டவரை அறியாதவர்கள் மேல் நீங்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் அவர்களால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
ஜெபம் : ஆண்டவரே மனிதர்களை உருவாக்கிய நீரே வணங்கப்படத்தக்கவர். மனிதர்கள் உருவாக்கிய மதங்களால் நான் பாதிக்கப்படாதபடி காத்துக்கொள்ளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment