Saturday, June 23, 2012

June 24, முட்டாள் ஞானிகள்

எரேமியா 8


நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. - எரேமியா 8:8


ஒரு பெரும் பேச்சாளர் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் துண்டுத்தாளில் ’முட்டாள்’ என்று எழுதி ஒரு சிறுவன் மூலமாகப் பேச்சாளருக்குக் கொடுத்து அனுப்பினார். பேச்சாளர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தார், நடுவில் இவ்வாறு சொன்னார், “ஒரு நண்பர் எனக்கு துண்டுத்தாளில் செய்தி அனுப்ப நினைத்துத் தன் பெயரை மட்டும் எழுதி அனுப்பியிருக்கிறார். செய்தியை எழுத மறந்துவிட்டார்.”

கர்த்தருடைய வேதம் எங்களிடம் இருக்கின்றது. அதை நாங்கள் நன்றாக ஆராய்ந்து வைத்திருக்கிறோம். அதை மற்றவர்களுக்குப் போதிக்கிறோம் ஆகவே நாங்கள் ஞானிகள் என்று சொல்லும் தலைவர்களை ஆண்டவர் மூடர்கள் என்கிறார்.

அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை என்பதுவே அவர்களது நிலையாக இருந்தது. வேதாகமத்தின் மக்களாக இருப்பது மட்டும் முக்கியமல்ல. வேதாகமத்தை வாழ்ந்து காட்டும் மக்களாக நாம் இருக்க வேண்டும்.

என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கடவுள் வருத்தப்படுகிறார். இதே நிலை நமது வாழ்க்கையிலும் இருக்கக்கூடும். வேத அறிவைவிட வேத ஞானம் நமக்குத் தேவை. அறிவு என்பது வாசிப்பதால், கேட்பதால், மனப்பாடம் செய்வதால் கிடைப்பது. ஆனால் வேத ஞானம் என்பது வேதாகமத்தின்படி நாம் வாழ்வதால் கிடைக்கும் அனுபவங்களால் கிடைப்பதாகும். ஆகவே ஞானிகள் என்று நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் கடவுளே நமக்கு அந்த பாராட்டைத் தரும் வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


சிந்தனை : அதிகமான வேதாகமங்களை வைத்திருந்தால் மட்டும் போதாது. அவற்றை கரைத்துக் குடித்திருந்தாலும் போதாது. அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.


ஜெபம் : வார்த்தையாகிய என் ஆண்டவரே, உமது வேதத்தின்படி வாழும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: