யோவான் 19:17-27
இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். - யோவான் 19:26
தனது தூக்குத் தண்டனைக்கு முன் கடைசி ஆசையாகத் தன் தாயைப் பார்க்க விரும்பியதாகச் சொன்னான் ஒரு பெரிய திருடன். தன் தாயை அருகில் வரும்படி சொல்லிவிட்டு, ”ஏன் அம்மா எனக்கு சிறுவயதிலேயே திருடுவது தவறு என்று சொல்லித் தரவில்லை? ஏன் அம்மா சிறு சிறு பொருட்களை நான் வீட்டிலும் வெளியிலும் திருடிய போது என்னைத் திருத்தவில்லை. இப்போது நான் சாவின் விளிம்பில் நிற்கிறேனே” என்று சொல்லித் தன் தாயின் மூக்கைக் கடித்ததாக ஒரு பழைய கதை உண்டு.
இங்கே இயேசுவின் நிலை முற்றிலும் மாறுபட்டது. இயேசுவுக்கு அவரது அன்னை சிறப்பாகவே எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தார். தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் தாங்கி இயேசுவை வளர்த்திருக்கிறார். மேலும் வேதத்திலும், ஒழுக்கத்திலும் இயேசு சிறந்து விளங்குவதற்கு அதிக உதவிகளைச் செய்திருப்பார். எனவே தான் வேதாகமம் சொன்னது போல தன் தாயை கனம் பண்ணுகிறார் இயேசு.
ஒரு உண்மையான யூதனாக இயேசு தனது தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்தார். வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையானது உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதுவே. இயேசு நமக்கு முன்மாதிரியாகவும், தனது செயல்களில் பரிபூரணமுள்ளவராகவும் தனது மரண வேதனையின் மத்தியிலும் இந்தக் கடைசிக் கடமையைச் செய்கிறார்.
நமது வாழ்வில் நமது தாய் தந்தை எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், மரியாதையையும் நாம் செய்ய வேண்டும். இந்த உலகத்தில் குறைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் நாம் இந்த உலகத்துக்கு வருவதற்குக் காரணமாக இருந்த நமது பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட வரம் என்று நினைக்க வேண்டும்.
சிந்தனை : நம் பெற்றோரைக் குறை சொல்வதைவிட அவர்கள் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஜெபம் : பரம பிதாவே நீர் எனக்குக் கொடுத்த பெற்றோருக்காக உமக்கு நன்றி. அவர்களுக்கு நான் உண்மையும், மரியாதையும் உள்ள மகளாக மகனாக வாழ எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment