யோவான் 19:28-37
அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. - யோவான் 19:36-37
ஆத்தும நேசரின் அங்கமகத்துவம் என்ற புத்தகத்தில் சாமுவேல் பவுல் என்னும் சென்ற நூற்றாண்டுப் போதகர் எழுதும் போது. இயேசுவின் எலும்பு முறிக்கப்பட்டால் அவரது விலாவில் குத்தப்பட்டிருக்காது. அவரது விலாவில் குத்தப்பட்டிருக்காவிட்டால் அவரது எலும்பு முறிக்கப்பட்டிருக்கும், ஆனால் இரண்டு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும்படியாக, அவரது எலும்புகள் முறிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய அவரது விலா குத்தப்பட்டது. ஆகவே இவ்வாறு இந்த இரு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின என்று கடவுளின் தீர்க்கதரிசனத்தின் மேன்மையைப் பற்றி எழுதுகின்றார்.
இயேசுவின் வாழ்க்கையில் அவரது பிறப்பு, அவரது பெயர், அவரது போதனைகள், ஊழியம், இறப்பு, உயிர்ப்பு ஆகிய அனைத்துமே தீர்க்கதரிசனமாகப் பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டு புதிய ஏற்பாட்டில் நிறைவேறின. இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் அனைத்துமே மிகவும் துல்லியமாக நடந்திருப்பதைப் பார்க்கும் போது வேதாகமத்தின் உண்மைத் தன்மையும் இயேசுவின் தெய்வீகத் தன்மையும் உறுதிப்படுத்தப்படுகின்றன.
அதே சமயம், இயேசுவின் முதல் வருகையின் போது இத்தனை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது உண்மையானால் அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவைகளே என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களில் ஒன்று அவரது இரண்டாம் வருகையைப் பற்றியது தான். இயேசு மீண்டும் வரும்போது அவரைக் குத்தியவர்கள் அவரை நோக்கிப் பார்ப்பார்கள் என்று சொல்கிறது.
சிந்தனை : முதல் வருகையில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வந்த இயேசு, இரண்டாம் வருகையில் எதிரிகளை அடித்து நொருக்கும் ராஜாதி ராஜாவாக நீதியுள்ள நியாயாதிபதியாக வருகிறார்.
ஜெபம் : இயேசுவே, உமது முதல் மற்றும் இரண்டாம் வருகையின் தீர்க்கதரிசனங்களைக் கண்டு உம் மேல் இன்னும் விசுவாசம் வைக்க உமது இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக கிருபை செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment