Wednesday, June 27, 2012

June 27, முப்பத்து முக்கோடி தேவர்கள்

எரேமியா11


யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி. - எரேமியா 11:13


நாங்கள் வேறு தெய்வங்களை வணங்குவதில்லை என்று கிறிஸ்தவர்கள் சொன்னாலும், பல நேரங்களில், பணம், அந்தஸ்து, ஜாதி, படிப்பு, அழகு, பொருட்கள் அல்லது சில நபர்கள் நமது வாழ்வில் மறைமுகமான பாகால்களாக இருக்கலாம். நமது பொழுதுபோக்கு, அரட்டைகள் போன்றவைகள் நமது பீடங்களாகப் போய்விடலாம்.

ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது திருச்சபையானது ஹிட்லரை ஒரு தெய்வத்தைப் போல ஏற்றுக்கொண்டது. இலட்சக்கணக்கான யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தபோது ஜெர்மன் திருச்சபை அதை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெர்மனிய வாலிபர்கள் ஆலயம் செல்லாமல் ஹிட்லரின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலயத்தின் பீடங்களிலும் ஹிட்லரின் நாசிக் குறியீடுகள் இருந்தன. பழங்கால ஜெர்மனிய அன்னியக் கடவுள் வணக்கம் திருச்சபைக்குள் புகுந்தது. இந்த நிலையில் தான் டிட்ரிச் பான்ஹூஃபர் என்னும் போதகர் ஹிட்லரை எதிர்த்துப் பிரசங்கம் செய்தார். கர்த்தரைத் தவிர வேறு தேவர்கள் கூடாது என்று தைரியமாகப் பேசினார். இறுதியில் ’தேசத்துரோகி’ என்று குற்றம்சாட்டப்பட்டு ஹிட்லரால் மரண தண்டனையைப் பெற்றார்.

யூதர்கள் புறஜாதிகளின் தெய்வங்களால் சிலைகளால் தங்கள் தெருக்களையும் தேவாலயத்தையும் நிரப்பினார்கள். ”ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்” என்று கடவுள் சொன்னார்.கிறிஸ்துவை வணங்கும் நாம் எந்தப் பொருளுக்கோ, கொள்கைக்கோ, நபருக்கோ, பெருமைக்கோ கடவுளின் இடத்தைக் கொடுத்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் உன் தெய்வத்திடமே உதவியையும் கேட்டுக் கொள் என்று கடவுள் சொல்லிவிடுவார்.


சிந்தனை : நீ எதை வணங்குகிறாயோ அதைப் போலவே மாறிவிடுவாய் என்று ஒரு பழமொழி உண்டு. கர்த்தரை வணங்குபவர்கள் அவரது குணங்களைப் பெற்றிருக்கவேண்டும்.


ஜெபம் : கர்த்தாவே உம்மை வணங்கி, உம் குணங்களான, பரிசுத்தம், அன்பு, நீதி ஆகியவற்றை என் வாழ்வில் பெற்றுக் கொள்ளவும் அதிகரிக்கவும் உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: