Tuesday, June 19, 2012

June 19, ரொம்ப நல்லவர்

எரேமியா 3


நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன். - எரேமியா 3:19

ஒரு திருச்சபையின் போதகர் மிகவும் நேர்மையானவராக இருந்தார். திருச்சபையும் அதிகப்பணம் இல்லாததாக இருந்தது. அந்தத் திருச்சபையில் இரண்டு பணக்கார பண்டிகைக்கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் மோசமான வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள். அவர்களில் ஒருவர் இறந்து போகவே, அடுத்தவர் வந்து, ஐயா, என் தம்பியின் அடக்க ஆராதனையில் என் தம்பி ஒரு நல்லவன் என்று சொல்லிவிட்டால் ஒரு லட்ச ரூபாய் ஆலயத்துக்கு நன்கொடையாகத் தருகிறேன் என்று சொன்னாராம். போதகருக்கு சிறிய சோதனையாக இது இருந்தது. சரி என்று சொல்லி அனுப்பிவிட்டார். அடக்க ஆராதனையில் போதகர் இவ்வாறு பேசினார், ”நாம் எல்லோரும் அறிந்தபடி இந்த இரு சகோதரர்களும் அயோக்கியர்கள் தான். ஆனால் மூத்தவருடன் ஒப்பிடும்போது இறந்து போனவர் மிகவும் நல்லவர்.”

இஸ்ரவேல் யூதா ஆகிய இருவரும் இப்படிப்பட்ட சகோதரிகளாக இருப்பதாக கடவுள் சொல்கிறார். ஒருவருக்கு ஒருவர் குறையில்லாதபடி இருவரும் கடவுளை விட்டுத் தூரம் போனார்கள். ஆகவே கடவுள் அவர்களுக்கு எச்சரிக்கையைக் கொடுத்து, அவர்களை மீண்டும் அவரது கிருபையைத் தேடி வரும்படி அன்பு கலந்த எச்சரிப்பைக் கொடுக்கின்றார்.

தகுதியில்லாத நம்மையும் தமது பிள்ளைகள் என்னும் வரிசையில் வைத்து, சிறந்த ஆசீர்வாதங்களை நமக்குத் தந்திருக்கும் கடவுள் நம்மிடமிருந்து உண்மையான நேசத்தையும் பக்தியையும் எதிர்பார்ப்பதில் தவறு இல்லையே?


சிந்தனை : நாம் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட, கடவுள் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைப்பதைவிட, நான் பாவி தான் என்று அவரது பாதங்களில் விழுவதே சிறந்தது.

ஜெபம் : அன்பின் ஆண்டவரே உம்மைவிட்டு விலகாத இருதயத்தையும், உம்மை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் மனதையும் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: