Monday, June 4, 2012

June 4, பாத்திரம்

யோவான் 18:1-14


பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ? - யோவான் 18:11


பாடுகளைப் பற்றிய போதனை இப்போது குறைந்துவிட்டது. ஆனால் பாடுகள் உலகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. கீழ்க்கண்ட புள்ளி விபரத்தை ஒரு ஊழிய நிறுவனம் தந்திருக்கிறது.

இயேசுவின் மரணத்துக்குப் பின்பான இரண்டாயிர வருட காலத்தில் சுமார் 4.5 கோடி மக்கள் இரத்த சாட்சிகளாக இறந்திருக்கிறார்கள். இதிலும் பாதிப் பேர் கடந்த நூற்றாண்டில் இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 20 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் துன்புறுத்தப்படுகிறார்கள் இவர்களில் 60 சதவிகிதம் சிறு குழந்தைகள். ஒவ்வொரு நாளும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காகத் தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றும் போது சில பாத்திரங்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இயேசுவே தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரம் நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று ஜெபித்தார். ஆனால் இயேசு அந்தப் பாத்திரத்தை வெறுத்து ஒதுக்கவில்லை. அந்தப் பாத்திரத்தின் வேதனையால் தான் அது நீங்குமா என்று கேட்டார். ஆனால் பேதுரு இயேசு கைது செய்யப்படும் போது தனது வாளைச் சுழற்றி இயேசுவையும் தன்னையும் பாதுகாத்துக் கொள்ள முயற்சித்தார். அப்போது தான் இயேசு சொல்கிறார், பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாமல் இருக்க மாட்டேன் என்கிறார்.

நமது வாழ்விலும் பிதா நமக்கென்று சில பாத்திரங்களை வைத்திருக்கின்றார். வியாதி, சில நபர்கள், சில சூழ்நிலைகள், சில குறைகள் போன்ற எந்த வகையான பாத்திரமாக இருந்தாலும் நாம் அவற்றை ஏற்றுக் கொண்டு பானம் பண்ண ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் அனைவருமே இரத்த சாட்சிகளாக உயிர் விடும் பாக்கியம் கிடைக்காது. ஆனால் இயேசுவுக்காகப் பாடுகளை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் வரும் போது அவற்றை விலக்க முயற்சி செய்யக்கூடாது.


சிந்தனை : சிலுவை என்பது தினசரி தூக்க வேண்டியதாக இருந்தாலும், பாத்திரம் என்பது எப்போதாவது பானம் பண்ண வேண்டியதாக இருக்கின்றது.


ஜெபம் : பிதாவே எனக்காக நீர் அனுமதித்திருக்கும் பாத்திரத்தில் பானம் பண்ண நீரே பலன் தாரும். என்னைத் தேற்றும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: