Friday, June 22, 2012

June 23, ஆ... ஆலயம்

எரேமியா 7


கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

- எரேமியா 7:4


எருசலேம் தேவாலயம் சாலமோன் ராஜாவால் கட்டப்பட்டது. அது பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டு, செருபாபேலால் திரும்பக் கட்டி எழுப்பப்பட்டது. இதுவும் ரோம தளபதி பாம்பெயால் அழிக்கப்பட்டது. ஏரோதால் கட்டப்பட்ட கடைசி தேவாலயமே ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி இயேசுவின் வார்த்தைகளின்படியே மீண்டும் அழிக்கப்பட்டது. இப்போது இஸ்ரவேலில் பல சிறு குழுக்கள் மீண்டும் எருசலேம் தேவாலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக ஆயததமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு கூட்ட யூதர்கள் இப்போதே ஆலயத்தைக் கட்டிவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் மேசியா வந்து ஆலயத்தைக் கட்டட்டும் என்று காத்திருக்கிறார்கள்.

யூதர்களுக்கு தேவாலயம் என்பது ஒரு புனித இடமாக மட்டுமல்ல, ஒரு மந்திரசக்தியுள்ளதாகவும் தெரிந்தது. தேவாலயம் நம் பட்டணத்திலும் நம் நாட்டிலும் இருக்கும் வரை நமக்குத் தோல்வியே வராது என்னும் எண்ணம் அவர்களுக்குள் இருந்ததால், தேவாலயத்தைக் கொண்டே பல போலி தீர்க்கதரிசிகள் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தனர். ஆனால் ஆண்டவரோ இந்த ஆலயம் இருப்பதால் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு என்று நினைக்காதீர்கள். ”உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.” என்று சொல்கிறார்.

ஆலயம், ஊழியம், ஊழியர்கள் போன்ற அனைத்தும் நமக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவர ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட வழிகளாக இருந்தாலும், அவற்றை மட்டுமே மந்திரம் போல பயன்படுத்தினால் நாமும் கடவுளின் விருப்பப்படி வாழமாட்டோம். ஆலயத்தை மதிப்பதுடன், ஆண்டவரின் ஆலயமாக இருக்கும் நமது உடலையும், நமது வாழ்க்கையையும் கடவுளுக்குப் பிரியமானதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.


சிந்தனை : உலகம் முழுவதிலும், ஆலயத்திலும் ஆண்டவர் எப்போதுமே இருக்கின்றார். தொழுது கொள்பவர்கள் உள்ளத்தில் அவர் இருக்கிறாரா என்பதுவே மிகவும் முக்கியமானதாகும்.


ஜெபம் : பரிசுத்தமான ஆண்டவரே, உமது ஆலயத்தை நேசிக்கவும், எனக்குள்ளும் உமது பிரசன்னத்தை உணரவும் எனக்கு அருள் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: