எரேமியா 9
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன். - எரேமியா 9:1
தனது டிராக்டரின் கீழே மாட்டிக் கொண்டு நான்கு நாட்கள் தனிமையாக புயல் மழையில் மாட்டிக் கொண்ட 73 வயதுப் பெரியவரை, அவரது ஆலயத்தின் உறுப்பினர்கள் தேடி வந்து கண்டுபிடித்தார்கள். அவரது ஒரு கால் மட்டும் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. ஆனால் ஆலய உறுப்பினர்கள் வராவிட்டால் அவர் உயிரே போயிருந்திருக்கும். அவர்கள் தேடிவரக் காரணம்? அவர் ஜெபக்கூட்டத்துக்கு வரவில்லையே என்று அவரது ஜெபத்தோழர்கள் தேடினார்கள். அதிகம் பேர் கலந்து கொள்ளாத ஜெபக்கூட்டத்தில் மிகவும் ஒழுங்காகக் கலந்து கொள்வார். அவர் வராததால் அவருக்கு ஏதோ பிரச்சனை என்று தோழர்கள் தேடத்துவங்கியிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் ஜெபவீரர்கள் என்ற வார்த்தையைக் கேட்டிருக்கின்றோம். இப்போது அப்படிப்பட்ட தேவமனிதர்கள் மறைந்து வருகிறார்கள். எரேமியா தன் ஜனங்களுக்காக அழுது ஜெபிக்கிறவராக இருந்தார். அழுகிறேன் இன்னும் அழுவேன் என்பது தான் இந்த வசனத்தில் அவர் பேசுவதின் அர்த்தமாக இருக்கின்றது. ”அழுகையின் தீர்க்கதரிசி என்று அவருக்குப் பெயர் உண்டு.
நமது உலகத்தில் நாட்டில், சமுதாயத்தில், திருச்சபையில் நடக்கும் தீமைகளுக்காக நாம் வருந்தி ஜெபிக்கும்போது நமது வாழ்வில் தீமைகள் குறைகின்றன. நமது நிலையைப் பார்ப்பவர்கள் சிறிதாவது மனதில் குத்தப்படுவார்கள். அத்துடன் நாம் எந்தத் தீமைக்காக ஜெபிக்கிறோமோ அதன் பாதிப்புகள் நம்மை அதிகம் பாடுபடுத்தாமல் இருக்கிறது. மேலும் அந்தத் தீமை அகலுவதற்கு நம்மால் செய்ய வேண்டியதையும் நாம் செய்வோம் - இவை எல்லாம் எரேமியாவின் கண்ணீர் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள்.
சிந்தனை : நமது ஜெபங்கள் நம்மை மட்டுமே சுற்றி வந்தால் அதில் சுயநலம் இருக்கின்றது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காக ஜெபித்தால் நமக்கும் அதின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
ஜெபம் : ஆண்டவரே என் மக்களுக்காக முடங்கும் முழங்கால்களையும், உருக்கும் இருதயத்தையும், ஊற்றாகும் கண்களையும் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment