யோவான் 18:28-40
பிலாத்து: ”சத்தியமாவது என்ன?” என்றான். - யோவான் 18:38
ஒரு மாலை நேரத்தில் மலையின் விளிம்பில் தொங்கிக் கொண்டு ஆண்டவரே காப்பாற்றும் என்று ஜெபித்த ஒருவன், ”மகனே கையை விட்டுவிடு” என்ற பதிலைக் கேட்டதும் ”அங்கே யாராவது ஒளிஞ்சிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டான். அவனது கேள்வியே, அவன் ஒரு பதிலை எதிர்பார்த்து ஜெபிக்கவில்லை என்று காட்டுகின்றது. பின்னர் திரும்பவும் “மகனே கையை விட்டுவிடு” என்ற சத்தம் கேட்டது. அவன் அதை அலட்சியம் செய்தவனாக இரவு முழுவதும் தொங்கிக் கொண்டிருந்தான். அதிகாலையில் வெளிச்சம் வந்தபோது அவன் கீழே பார்த்தால் அவன் கால்களுக்குக் கீழே சில அடி தூரத்தில் தான் தரை இருந்ததைத் தெரிந்து வருத்தப்பட்டான். இரவு முழுவதும் கை வலிக்கத் தொங்கிக்கொண்டிருந்தேனே, கடவுள் சொன்னது போல என் கையை விட்டிருந்தால் பத்திரமாக இரவிலேயே தரையில் படுத்து உறங்கியிருந்திருக்கலாமே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
பிலாத்துவும் இயேசுவிடம் தனது விசாரணையை நடத்தும் போது உண்மை என்றால் என்ன என்று இயேசுவிடம் கேட்டார். ஆனால் அதற்கான பதிலை அவர் எதிர்பார்க்காமல் அடுத்த கேள்விக்குப் போய்விடுகிறார். அவர் உண்மையாகவே உண்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்திருந்தால் இயேசுவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தன் வாழ்க்கையில் மாற்றத்தைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தனது பதவி, கவுரவம், அமைதியான வாழ்க்கை ஆகியவற்றையே உண்மையைக் காண்பதைவிட மேலானதாக நினைத்ததால் அவரால் அதற்கு மேல் இயேசுவிடம் விளக்கம் கேட்க மனம் வரவில்லை. நம் வாழ்விலும் ஏற்படும் பல கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தமது வேதம் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் பதில்களையும் தீர்வுகளையும் தர ஆயத்தமாக இருக்கிறார். நாம் உண்மையிலேயே பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் அவரிடம் போக வேண்டும்.
சிந்தனை : பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகள் கேட்பவர் பதில் சொல்பவரை மதிக்கவில்லை என்று அர்த்தம். அல்லது தனக்கு எல்லாம் தெரியும் என்ற பெருமை இருக்கிறது என்று அர்த்தம்.
ஜெபம் : சத்தியமாகிய கடவுளே, உம்மிடம் பதிகளையும் தீர்வுகளையும் பெற்று உம் வேதத்தின்படி எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள எனக்கு உதவிபுரியும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment