Tuesday, June 19, 2012

June 20, வற்புறுத்தல் இல்லை

எரேமியா 4


இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 4:1


ஹாரி வில்லியம் என்னும் குதிரைகளைப் பழக்கும் வல்லுனர் ஒருவர் குதிரைகளைப் பழக்குவதில் உள்ள வெற்றி இரகசியங்களை இவ்வாறு சொல்கிறார்:

முடிவே இல்லாத பொறுமை தான் மிருகங்களைப் பழக்குவதில் உள்ள இரகசியமாகும். ஒரு போதும் குதிரையை அடிக்கக் கூடாது. மாறாக திரும்பத்திரும்ப அதற்கான கட்டளைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். சாதிக்கும் போது பரிசுகளையும், தோற்கும் போது சிறிய ஏச்சுக்களையும் கொடுக்க வேண்டும். அத்துடன் எல்லா நாட்களும் அந்த மிருகத்திடம் உங்களை ஒரே மாதிரியாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

கடவுளும் இஸ்ரவேல் மக்களிடம் மட்டுமல்ல நம்மிடமும் இவ்வகைப் பொறுமையுடன் தான் பழகுகிறார். அவர் மாறாதவர். நம்மைத் தண்டிக்கவில்லை. அவரது சிறிய ஏச்சுக்களே நமக்குப் பெரும் தண்டனைகளைப் போல் தெரிகிறதே! அவர் உண்மையாகவே தண்டித்தால் நாம் யாருமே உயிரோடு இருக்க முடியாதே!

கடவுள் மிருகங்களைத் துன்புறுத்தும் எஜமான்களைப் போல அல்ல. நமக்கு மரியாதையைக் கொடுத்து நம்மிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். நம்மை வற்புறுத்தி மனந்திரும்புவதற்குக் கூப்பிடாமல், நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று ஒரு மென்மையான மேன்மக்களில் ஒருவரைப் போல நம்மிடம் கேட்கிறார்.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாக இருந்தால் இந்தக் குரலைக் கேட்டு அவரிடம் உடனடியாகத் திரும்புவோம். குதிரையை விடவும் மட்டமானவர்களாக இருந்தால் அவர் சாட்டையால் அடிக்கட்டும், துன்புறுத்தட்டும் என்று காத்திருப்போம்.


சிந்தனை : நமக்கு மதிப்பு தந்து காத்திருக்கும் கடவுளுக்கு நாம் தரும் மதிப்பு என்ன?

ஜெபம் : ஆண்டவரே உம்மிடம் மனந்திரும்பும் உணர்வுள்ள இருதயமாக எப்போதும் என் இருதயம் இருக்க வரம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: