Tuesday, June 19, 2012

June 17, சிறுபிள்ளைத் தனம்

எரேமியா 1


அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். - எரேமியா 1:6


எரேமியா தன் வயதைப் பற்றிக் கவலைப்படுகிறான். ஆனால் கடவுளோ தனது பணியைப் பற்றிக் கவலை கொண்டிருக்கின்றார். இஸ்ரவேல் நாட்டில் சிறுவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். மேலும் சிறுவர்களை யாரும் மதிப்பதுவும் இல்லை. அதனால் தான் இயேசுவும் கூட சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குத் தடை செய்யாதிருங்கள் என்று சொன்னார். ஆனால் பல சிறுவர்களும் சிறுமிகளும் வேதாகமத்தின் காலத்திலும் பின்னர் வந்த காலங்களிலும் பெரிய சாதனைகளை கடவுளுக்கென்று செய்திருக்கின்றனர். நாகமானின் வேலைக்காரப் பெண், மோசேயின் சகோதரி, ஐந்து அப்பம் இரு மீன்கள் கொண்டுவந்த சிறுவன் என்று அநேக உதாரணங்களைச் சொல்லமுடியும்.

சிறு பிள்ளைகளின் அறியாமை மற்றும் கபடமில்லாத தன்மைகள் இந்த சமுதாயத்தின் தீமைகளை அவர்கள் காணும் போது மாறிவிடுகின்றன. சிறுவர்களின் ஆக்கத்திறனும் நேர்மையும் காப்பாற்றப்பட்டால் அவர்கள் வருங்காலத்தின் சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். எனவே தான் சிறுபிள்ளைகளைப் போல மாறுங்கள் என்று பெரியவர்களுக்கு இயேசு அறிவுரை கூறினார்.

இந்த அதிகாரத்தில் ஊழியத்துக்குப் போவதற்கு வயது தடையல்ல என்பதற்கு கடவுள் தரும் விளக்கத்தை நாம் காணலாம்:

1) அனுப்புவது கடவுள்.

2)கடவுள் உடன் இருக்கிறார் ஆகவே பயம் தேவையில்லை.

3) கடவுள் தனது வார்த்தைகளை எரேமியாவின் வாயில் வைத்தார்.

4) எரேமியாவை தீர்க்கதரிசியாக ஏற்படுத்தியது கடவுள்.


சிந்தனை : கடவுளின் தேர்ந்தெடுப்பை யாரும் குறை சொல்ல முடியாது. உலகத்தின் தேர்ந்தெடுப்பைப் பார்த்து கடவுள் நகைக்கிறார்.


ஜெபம் : ஆண்டவரே எனது அனுபவம் இல்லாத தன்மை, பயம் ஆகியவற்றைப் போக்கி உமது ஊழியத்தை என்னால் முடிந்தவரை செய்ய உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: