நீதிமொழிகள் 18
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.- நீதிமொழிகள் 18:13
மனிதனுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அவன் இரண்டு மடங்கு கேட்டு ஒரு மடங்கு பேச வேண்டும் என்பதற்காகத் தான் என்று ஒரு சீனப் பழமொழி சொல்கிறது.
நாம் அவசரப்பட்டுக் கேட்கும் போது தவறாகப் புரிந்து கொண்டு, தவறான பதிலைச் சொல்லி தீமையான விளைவுகளை சந்திக்கிறோம். ஆனால் நன்றாகக் கவனித்துக் கேட்கும்போது நாம் சரியான பதிலைப் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கின்றது. மேலும் நமக்கு எல்லாம் தெரியும் என்று பிறரிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சில வினாடிவினாப் போட்டிகளில் கேள்வி கேட்டு முடிக்கப்படுவதற்கு முன்பாகவே யாராவது பதில் சொல்லத் துவங்கிவிட்டால், அவர்கள் கேள்வியை முழுவதுமாக முடித்து அதற்குப் பதிலும் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் கேள்வியைத் தவறாகச் சொன்னால் தவறு என்று கொள்ளப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுவிடும்.
நம் வாழ்விலும் பிறரது பேச்சுக்களை முழுமையாகக் கேட்பதற்கு முன்பாகப் பேசுவது என்பது நம்மைப் பற்றி அவர்கள் மதிப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே அதிக செய்யப்படுகின்றது. மேலும் நாம் அவர்களது பேச்சில் அக்கறை இல்லாதது போலக் காட்டுகின்றது. பிறரது விஷயங்களைக் கவனித்துக் கேட்பதன்மூலம் அவர்களுக்கும் மனதில் ஆறுதல் கிடைக்கின்றது. ஜெபத்தைக் கேட்கிறவர் என்று கடவுளுக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நமது ஜெபங்களைப் பொறுமையாகக் கேட்கும் கடவுள் தேவையுள்ளவர்கள் பேசுவதையும் முழுமையாகப் பொறுமையாகக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். அவசரப்பட்டு உணர்ச்சியுடன் பதில் சொல்பவர்கள் கெட்ட பெயருடன் தண்டனையையும் பெறுவார்கள்.
சிந்தனை : அவசரப்பட்டுப் பேசினால் உளறல் தான் பதிலாகும். நிதானம் ஞானத்தைத் தரும்.
ஜெபம் : கிருபையின் ஆண்டவரே, பொறுமையையும், கவனத்தையும் எனக்கு அதிகம் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment