யோவான் 1:32-42
இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். - யோவான் 1:36
சீனாவில் ஊழியம் செய்த பலர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை சீன மக்களிடம் புரியும் வகையில் சொல்வதற்கு வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். ஒரு ஊழியர் நீதி என்பதற்கான சீன மொழியின் வார்த்தையில் இதற்கான வழியைக் கண்டுபிடித்தார். அந்த வார்த்தையில் இரு பகுதிகள் இருந்தனவாம், மேற்பகுதியில் ஆடு என்பதற்கான குறியும் கீழ்ப்பகுதியில் நான் என்று சொல்வதற்கான குறியீடும் இருந்தன. ஊழியர், ஆட்டுக்குட்டியின் கீழ் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்று நற்செய்தியைக் கூறி, இயேசு கிறிஸ்து தான் அந்த ஆட்டுக்குட்டி என்று விளக்கினாராம்.
யோவான் தனது சீஷர்களிடம் இயேசுவை அறிமுகம் செய்த போது அவர்கள் இயேசுவின் பின்னே போனார்கள். இதுவே ஒரு உண்மையான சத்தமிடுகின்ற, கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுகிறவனின் பணியாகும். பெரும் தலைவர்கள் தங்களைப் பலர் பின்பற்ற வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. ஆனால் எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. ஆகவே உண்மையான ஆன்மீகத் தலைவன் தன்னைப் பின்பற்றுபவர்களை இயேசுவுக்கு அறிமுகம் செய்து அனைவரும் இயேசுவையே பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
யோவானுக்கும் கடவுளின் வெளிப்பாடு இல்லாமல் இவ்வாறு சொல்லியிருக்க முடியாது. தனது உறவினர் என்று இயேசுவை அவர் பெரிது படுத்தியிருக்கவும் மாட்டார். ஏனென்றால் யோவான் தன் குடும்பத்தை விட்டு, கடவுளுக்காக காட்டுக்குள் போனவர். அரசனாக இருந்தாலும் குற்றத்தைத் தட்டிக் கேட்டவர். அப்படிப்பட்ட யோவானைப் பலர் பின்பற்றியதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் யோவான் தன்னைவிடப் பெரியவராகிய ஆண்டவரைப் பின்பற்றும்படி தனது சீஷர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்.
சிந்தனை : நாம் தேவ ஆட்டுக்குட்டியைப் பின்பற்றுகிறோமா? சத்தங்களைப் பின்பற்றுகிறோமா? நம்மைப் பின்பற்றுகிறவர்களை தேவ ஆட்டுக்குட்டியிடம் அனுப்பி விடுகிறோமா?
ஜெபம் : தேவ ஆட்டுக்குட்டியாக எங்கள் பாவங்களைச் சுமந்த இயேசுவே, உம்மை மட்டுமே பின்பற்ற, உம்மிடம் மட்டுமே மக்களை அனுப்பி வைக்க எனக்கு தாழ்மையையும் உண்மையையும் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment