Thursday, April 19, 2012

April 18, உத்தமன்

யோவான் 1:43-51


இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். - யோவான் 1:47

இரண்டு தீய சகோதரர்கள் தங்கள் பணத்தால் தங்களைப் பற்றிய மோசமான செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டிருந்தனராம். ஆனாலும் மக்கள் அவர்களது அநியாயமான வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருந்தனர். இந்த சூழலில் சகோதரர்களில் ஒருவன் இறந்து போகவே அண்ணன் திருச்சபையின் போதகரிடம் வந்து, ஐயா இறந்து போன என் தம்பி நல்லவன் என்று அடக்க ஆராதனையில் நீங்கள் சொன்னால், ஆலயத்துக்குத் தேவையான பணத்தை நான் தருகிறேன். இல்லையென்றால் உங்களுக்கு பிரச்சனை தான் என்று மென்மையாக எச்சரித்துவிட்டுப் போய்விட்டான். அடக்க ஆராதனையில் போதகர் இவ்வாறாகச் சொன்னார், “இதோ இங்கே இருக்கும் மனிதன் ஒரு தீயவன், தன் மனைவிக்கு துரோகம் செய்தவன், சமுதாயத்தில் பல தீமைகளைச் செய்தவன். ஆனாலும் இவனுடைய அண்ணனோடு ஒப்பிட்டால் இவன் ஒரு உத்தமன்”

இயேசு மனிதர்களின் இருதயத்தை அறிந்தவர். அதனால் தான் நாத்தான்வேலின் உள்ளான மனிதனைப் பற்றி அவர் சாட்சி கொடுத்தார். அத்துடன் அவரை சந்திக்கும் முன் நாத்தான்வேல் இருந்த அத்திமரத்தைப் பற்றியும் சொல்லிவிட்டார். இயேசு சகலத்தையும் அறிந்தவர் என்பதை இந்தப் பகுதி நமக்குக் காட்டுகின்றது.

இயேசு சகலத்தையும் அறிந்தவர் என்பதைவிட அவர் என் மனதின் ஆழங்களை அறிந்திருக்கிறார் என்னும் நடைமுறை உண்மையே நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கின்றது. நம்மைப் பார்த்து இயேசு ‘கபடற்ற உத்தம கிறிஸ்தவன்’ என்று சொல்லும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்கின்றதா? அவரை சந்திக்கச் செல்லும் அளவுக்கு நமக்குத் துணிவு இருக்கின்றதா? கபடமும், அநியாயமும் அவர் அருகே செல்லும் போது அகன்று போய்விடும். அவ்வாறே கபடற்றவர்களும் உத்தமர்களும் இயேசுவிடம் செல்லும் போது தான் முழுமை அடைகிறார்கள்.

சிந்தனை : நம்மை நோக்கி இயேசு “இதோ கபடற்ற உத்தம கிறிஸ்தவன்” என்று சொன்னால் நமது உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?


ஜெபம் : பரிசுத்தரே, என் கபடம், தீமைகளை அகற்றி, உத்தமனாக, நீர் பாராட்டும் நபராக மாற உதவி செய்யும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: