யோவான் 1:19-31
கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன். - யோவான் 1:23
அகஸ்டின் என்னும் பரிசுத்தவான் தனது பழைய வாழ்க்கையில் மனம் போனபோக்கில் அவருக்குத் தெரிந்த எல்லா சிற்றின்பங்களிலும் பாவங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் பூங்கா ஒன்றில் தனது பாவ வாழ்க்கையை நினைத்து மனங்கசந்து அழுது கொண்டிருந்த போது ஒரு சிறு பிள்ளை எடுத்து வாசி எடுத்து வாசி என்று பாடிக்கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு தன் அருகில் இருந்த வேதாகமத்தைத் திறந்து வாசித்தார். அந்த வசனம் அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆண்டவர் தனது வார்த்தையை மனிதர்களிடம் அறிமுகம் செய்வதற்கு சில மனித சத்தங்களையும் பயன்படுத்துகிறார்.
வார்த்தை இயேசு என்றால் அவரது உறவினராகிய யோவான் சத்தம் என்று அழைக்கப்படுகின்றார். இயேசு என்னும் வார்த்தைக்கான புகழும் மகிமையும் வேறு யாருக்கும் கொடுக்கப்படக் கூடாது. மனிதர்கள் மனிதர்கள் தாம். கடவுள் கடவுள் தான். எனவே தான் யோவான் தன்னைப் பற்றிச் சொல்லும் போது நான் சத்தமாயிருக்கிறேன் என்கிறார்.
சத்தம் என்பது வார்த்தையின் வெளிப்பாடு ஆகும். ஆனால் சத்தம் வார்த்தையாகாது. நமது ஊழியர்கள் யாவருமே வேத வார்த்தையிலிருந்து பேசினாலும் அவர்கள் வார்த்தை அளவுக்கு முக்கியமானவர்கள் அல்ல. வார்த்தையை நமக்குக் கொண்டு வரும் சத்தம் தான்.
சத்தம் இல்லாமல் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், சத்தங்கள் வார்த்தையைத் துல்லியமாகக் கொடுக்காமல் குழுப்பத்தை ஏற்படுத்தலாம்.
நாம் சத்தமாக மாறும் போது வார்த்தையை அப்படியே உச்சரிக்க வேண்டும். நமது சொந்த வார்த்தைகளை கடவுளின் வார்த்தைகள் என்று சொல்லி பிறரைக் குழப்பக் கூடாது.
சிந்தனை : வார்த்தை இல்லாமல் சத்தம் இல்லை. ஆனால் சத்தம் இல்லாமலும் வார்த்தை இருக்கும்.
ஜெபம் : வார்த்தையாகிய இயேசுவே, உம்மை பிறருக்கு வெளிப்படுத்துகிற சத்தமாக என்னை மாற்றும் என்னைப் பார்ப்பவர்கள் உம்மைப் பின்பற்ற உம்மை நோக்கித் திருப்பப்பட உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment