உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம். - யோவான் 4:42
ஒரு ஊழியரின் முயற்சியால் மிக்கி கோகென் என்னும் பெரிய கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டானாம். அவனைப் பற்றி பல கிறிஸ்தவக் கூட்டங்களில் விளம்பரங்களும் சாட்சிகளும் கொடுக்கப்பட்டன. பல காலத்துக்குப் பின் அந்த மனிதனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாததால் இன்னொரு ஊழியர் அவனிடம் பேசியபோது, இயேசுவை ஏற்றுக் கொண்டால் கெட்ட பழக்கங்களை எல்லாம் விட்டுவிட வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லையே. இப்படியெல்லாம் நிபந்தனைகள் இருந்தால் எனக்கு அந்த இயேசு வேண்டாம் என்று சொல்லிவிட்டானாம்.
பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் அவர்களது ரசிகர்களும் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்வார்களே என்ற எண்ணத்தில் பிரபலங்களுக்காக ஜெபிப்பவர்களும், அவர்களிடம் ஊழியம் செய்பவர்களும் அதிகம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் பிரபலங்களோ, பிரபலங்களுக்கு ஊழியம் செய்கிறவர்களோ முக்கியமல்ல. அவர்களை இரட்சிக்கும் கிறிஸ்துவாகிய உலக ரட்சகரே முக்கியமானவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பிரபலத்துக்காக கிறிஸ்துவிடம் வருவதை விட கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவிடம் வருவதுவே எல்லா மக்களுக்கும் தேவையான ஒன்றாகும்.
இங்கே சமாரியப் பெண் இயேசுவைப் பற்றிச் சொல்லியதைக் கேட்டு பலர் இயேசுவைப் பார்க்க, அவரது போதகத்தைக் கேட்கப் போனார்கள். பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணிடம் நீ சொன்னதினால் அல்ல நாங்களே இயேசு பேசுவதைக் கேட்டு அவரை விசுவாசிக்கிறோம் என்றார்கள். இப்படித்தான் மக்கள் கிறிஸ்துவிடம் வரவேண்டும்.
சிந்தனை : நட்சத்திரங்களின் மினுமினுப்பைவிட நீதியின் சூரியனின் வெளிச்சமே மக்களை பரலோகத்துக்குக் கொண்டு செல்லும்.
ஜெபம் : கர்த்தாவே என் சொல்லைவிட உம் உபதேசமே பிறரை உம்மிடம் கொண்டுவரட்டும். என்னை பயன்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment