யோவான் 6:16-24
இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள். - யோவான் 6:19
தலைகீழாகத் தொங்கும் மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் அதைப் பார்க்கக்கூட முடியும். அவதார் என்ற திரைப்படத்தில் வேறு உலகம் ஒன்றைப் படைத்து அதில் தலைகீழாகத் தொங்கும் மலைகளையும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தால் நம்பும்படியாக அமைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் உலகத்தில் எந்த அதிசயத்தையும் நிஜமாகச் செய்யாவிட்டாலும், தொழில் நுட்ப யுக்திகளால் செய்து முடித்துவிடுகிறார்கள். குறிப்பாக சினிமா மற்றும் ஓவியங்களில் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வந்திருக்கின்றது. வேதாகமத்தில் நடந்த அற்புதங்கள் அனைத்துமே சினிமாவில் சாத்தியமாகிறது. கிராஃபிக்ஸ், அனிமேஷன், மார்ஃபிங் என்று பல தொழில் நுட்பங்கள் நமது ஊடகங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இயேசு கடலில் நடந்து வந்தார் என்னும் சம்பவம் நமக்கு அதிக ஆச்சரியத்தைத் தராமல் போகலாம். ஆனால் உண்மையிலேயே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால், படகில் சென்ற இயேசுவின் சீடர்கள், இயேசு கடலின் மேல் நடந்து வருவதைக் கண்டு பயந்தார்கள்.
இயேசுவின் வாழ்க்கையை உடன் இருந்து பார்த்த அவரது சீஷர்கள் பயப்படும் அளவுக்கு அவரது தெய்வீகம் வெளிப்பட்டது. நமது வாழ்விலும் இயேசு என்பவர் ஒரு சாதுவான, மென்மையான நண்பர் என்று நினைத்தால் நான் அவரது அடுத்த பக்கத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அவர் நம்மிடம் அன்பாக இருக்கிறார் என்னும் அளவுக்கு அவர் பயப்படத்தக்க ஆண்டவர் என்பதுவும் உண்மையாகும். இயேசுவின் அற்புதமான, தெய்வீகத்தை அவரது வேதாகமத்தை தியானிப்பதன் மூலமாகவும் அவருடன் தினமும் ஏற்படுத்தும் உரையாடல்கள் மூலமாகவும் புரிந்து கொள்ள முடியும்.
சிந்தனை : பயங்கரமானவர் அல்ல இயேசு ஆனால் அவரது செயல்கள் பயங்கரமானவைகள்.
ஜெபம் : அற்புதரே, உம் அன்பையும், தெய்வீகத்தையும் கண்டு உம்மை எப்போதும் தொழுது கொள்ளும் விசுவாசியாக என்னை வைத்திரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment