நீதிமொழிகள் 31
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். - நீதிமொழிகள் 31:30
சரியான ஒப்பனையும், புகைப்படக் கருவியின் கோணமும் அமைந்தால் யாரையுமே அழகானவர்களாகக் காட்ட முடியும் என்று சொல்லியிருக்கிறார் ஒரு அழகுக்கலை நிபுணர். இந்த உலகத்தில் அழகு என்பது தோலில் ஆழம் தான் என்று சொல்லப்படுகிறது. வாலிபம் மறையும் போது தோல் சுருங்குகிறது. அழகும் மறைகிறது. ஆனால் மனதில் இருக்கும் நல்ல குணங்களும், ஒருவருக்கு ஒருவர் பழகும் விதமும் தான் உண்மையான அழகு என்பதை வேதம் காட்டுகின்றது. கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள் என்று வேதம் சொல்கிறது. அழகு ஏமாற்றக்கூடியது ஏனென்றால் ஒப்பனையும், நாம் பார்க்கிற கோணமும் நம்மை ஏமாற்றலாம். காலங்கள் மாறும் போது அழகு மறைந்து போகலாம். அழகு வீணாது, ஏனென்றால் அழகு என்பது வயதான காலத்தில் நமக்கு உணவு தரப்போவதும் இல்லை நமது ஆபத்துக்களில் இருந்து நம்மைக் காப்பாற்றப்போவது இல்லை. காலம் கடந்து போகும்போது கறைந்து போகும் ஒன்று எப்படி உபயோகமாக இருக்க முடியும்?
ஆனால் கடவுளுக்குப் பயப்படுகிற ஒரு பெண்ணானவள், காலங்கள் ஓடும் போது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்து இருப்பதால் நல்ல குணங்களும், நல்ல செயல்களும் அதிகரிப்பதால் பிறரால் போற்றப்படுவாள். அழகு சாதனங்களையோ அழகு நிலையங்களையோ தேடிப் போக்கும் அளவுக்கு வேதாகமத்தையும் ஜெபத்தையும் நாடினால் உள்ளான அழகு வளர்ந்து கொண்டே இருக்கும். வெளிப்புற அழகு மங்கிப் போய்க்கொண்டிருக்க, உள்ளான அழகு மலர்ந்து கொண்டிருக்கும். எனவே வெளிப்புற அழகைக் கண்டு ஏமாந்துவிடாமல், உட்புற அழகை அலட்சியம் செய்துவிடாமல் இருக்க கவனமாக இருப்போம்.
சிந்தனை : உங்கள் உள்ளான அழகுக்கு என்ன சாதனங்களை உபயோகிக்கின்றீர்கள்?
ஜெபம் : இறைவா உமது அழகை என்னில் ஊற்றி என்னைக் காண்கிறவர்கள் உம் சாயலை என்னில் காண உதவும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment