யோவான் 4:43-54
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். - யோவான் 4:50
இயேசுவின் வார்த்தையை நம்பிப் போவதற்கு இயேசுவின் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். இயேசுவின் மேல் நம்பிக்கை வருவதற்கு அவரை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் அவரைப்பற்றி விளக்கமாகச் சொல்லும் வேதாகமத்தை அதிகம் தியானிக்க வேண்டும்.
கப்பர் நகூமின் அதிகாரி ஒருவர் தன் மகன் சுகமடைவதற்காக இயேசுவிடம் வந்தார். இந்த மனிதருக்கு இயேசுவைப் பற்றி எவ்வளவு தெரியும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் தனது மகன் சுகமாவதற்காக அவர் எதையும் செய்ய ஆயத்தமாக இருந்தார். ஆனால் பல சந்ததிகளாக இயேசுவை அறிந்தவர்களும், இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட முதல் தலைமுறை கிறிஸ்தவர்களும் இயேசுவின் வார்த்தையை நம்பி உலகத்துக்குள் செல்கிறோமா? என்று கேள்வி கேட்டால், கப்பர் நாகூம் அதிகாரி நம்மைத் தலைகுனிய வைத்துவிடுவார்.
இயேசுவை நம்புகிறோம் என்றாலும், சிபாரிசுகளையும், லஞ்சத்தையும் பக்கத்தில் வைத்துக் கொள்கிறோம். இயேசுவை நம்புகிறோம் என்று சொல்லியும் அதிகம் கவலைப்படுகிறோம். இயேசுவின் வார்த்தை எப்போதுமே வல்லமை உள்ளது. அதற்கு இருக்கும் வல்லமையை அனுபவிக்க வேண்டுமென்றால் வேறு எதுவும் இல்லாத, ஆதரவற்ற, அபாயகரமான நிலை தான் சரியான சூழலாகும். நம் வாழ்விலும் அப்படி சூழலைத் தேடிப் போக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அப்படிச் சூழலே வராமல் பாதுகாப்பாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று நமது சொந்த பலத்தில் முயற்சி செய்யக்கூடாது.
சிந்தனை : வார்த்தையை நம்ப பேசியவர் மேலுள்ள நம்பிக்கை உதவும். வார்த்தை தவறாதவர், வார்த்தையால் உலகத்தை உருவாக்கியவர் வார்த்தை என்று அழைக்கப்படுபவரின் வார்த்தையை நாம் நம்பலாம்.
ஜெபம் : உம் வார்த்தையை அப்படியே நம்ப உதவும் இயேசுவே. உம் வார்த்தையைத் தவிர மற்றவற்றை நம்பி என்னைக் கெடுத்துக் கொள்ளாதிருக்க உதவும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment