Friday, April 6, 2012

April 7, ஆடும் பன்றியும்

நீதிமொழிகள் 24


நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். - நீதிமொழிகள் 24:16

பலவிதமான தீய பழக்கங்களிலும் தொழில்களிலுமிருந்து மனந்திரும்பி வந்த லியோன் என்பவர் தற்போது ஊழியம் செய்து கொண்டிருக்கிறார். தனது திருச்சபையின் வெற்றியைப் பற்றிச் சொல்லும் போது, ”எனது பழைய தீய வாழ்க்கையை திருச்சபையிலுள்ள யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. திருச்சபை எனக்குக் கொடுத்த தெளிவான செய்தி இதுதான், “நாங்கள் உன்னை நேசிக்கிறோம், கடவுள் உன்னை நேசிக்கிறார். மனந்திரும்பி வந்துவிடு” என்பது தான்.

சிலர் தீமையை விட்டு விலகி கடவுளின் பிள்ளைகளாகிறார்கள். பலர் தீமையிலேயே தங்கள் வசிக்கும் இடத்தை அமைத்துக் கொண்டார்கள். சாக்கடையில் விழுந்த ஆட்டுக்கும் பன்றிக்கும் உள்ள வித்தியாசம், ஆடு, உதறிவிட்டு எழுந்து வந்துவிடும். பன்றியோ அங்கேயே விழுந்து கிடக்கும். நீதிமான் என்பவன் தனது வாழ்வில் வீழ்ச்சிகளைக் கண்டாலும் கடவுளின் உதவியாலும் கிருபையாலும் மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடருவான். ஆனால் துன்மார்க்கனோ, தனது குற்ற உணர்ச்சி மற்றும் சிற்றின்பப் பிரியம் ஆகியவற்றால் தீமையிலேயே விழுந்து கிடப்பார்கள்.

வீழ்ச்சி என்பது எல்லா மனிதருக்கும் உரியது. ஆனால், மனந்திரும்பி மீண்டும் எழுந்திருப்பதே மனிதனின் உயர்வுக்குக் காரணமாகிறது. கிருபை என்பது தகுதியில்லா ஒருவருக்குக் கொடுக்கப்படும் பரிசு என்கிறது வேதம். தீமையில் விழுந்து கிடப்பவருக்கு எழுந்திருக்கக் கை கொடுக்கிறார் நம் ஆண்டவர். நம் கடவுள் கிருபை பெருத்தவர் என்கிறது வேதம். ஆகவே உங்கள் வாழ்வில் எத்தனை முறை தோல்வி, தடுமாற்றம், சோதனைகள், தீமைகள் வந்தாலும் பரம தகப்பனிடம் கெஞ்சுங்கள். மனம் வருந்தி அவரிடம் மீண்டும் வாருங்கள். இயேசுவின் சிலுவை மரணமே நம்மை நீதிமான்களாக்கியிருக்கின்றது. நமது பக்தி வாழ்க்கை அல்ல. ஆகவே அவரையே நோக்கிப் பார்ப்போம். நிமிர்ந்து நிற்போம்.

சிந்தனை : எத்தனை தரம் விழுகிறோம் என்பதை விட விழுந்த பின் என்ன செய்கிறோம் என்பதுவே முக்கியமானது.


ஜெபம் : கிருபையின் கடவுளே, என் வாழ்வின் வீழ்ச்சிகளுக்காக வருந்துகிறேன். தயவாக என்னை எழுந்து நிற்க, உம் பரிசுத்த பாதையில் பயணம் தொடர உதவும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: