நீதிமொழிகள் 28
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.- நீதிமொழிகள் 28:9
அண்ணன் தம்பிகளான இரு சிறுவர்கள் தங்கள் பாட்டியின் வீட்டிற்குப் போயிருந்தார்கள். இரவில் ஜெபிக்கும்போது சிறியவன் சத்தமாக ஜெபித்தான், “ஆண்டவரே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு வீடியோ கேம், சைக்கிள், ஐ பாட் மூணும் வேணும். ஆமென்” அண்ணன் கேட்டான், “சத்தம் இல்லாம ஜெபம் செய்தால் என்ன, கடவுளுக்கு காது கேக்காதுன்னு நினைச்சியா?” தம்பி பதில் கொடுத்தான், “கடவுளுக்குக் கேக்கும் ஆனா பாட்டியம்மாவுக்கு காது நல்லா கேக்காதே!”
நமது ஜெபங்கள் அனைத்துமே நாம் கேட்பவைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு வங்கியில் பணத்தைப் போடாமல் ஏ டி எம் கார்டில் பணம் எடுக்க முடியாதது போல நமது வாழ்க்கையில் வேதத்தைக் கேட்பது நமது ஜெபத்திற்குப் பதிலைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் ஜெபிக்கின்ற கடவுள் தான் நமக்குத் தமது வேதத்தையும் தந்திருக்கிறார். ஆகவே ஜெபத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வேதத்துக்கும் கொடுக்க வேண்டும்.
வேதத்தை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் சில சுயநல ஜெபங்களைச் செய்யவே மாட்டார்கள். சுயநலம் என்பது கடவுளுக்கு அருவருப்பானது, அதே சுயநலம் ஜெபம் என்ற பெயரில் வெளிப்படும் போது அது மிகவும் அருவருப்பாகிவிடுகின்றது. ஆனால் வேதத்தின்படி நடக்கிறவர்களின் ஜெபமானது நறுமணமாக கடவுளுக்குத் தோன்றுகிறது. நம்முடைய ஜெபம் எப்படி இருக்கின்றது? வேதாகமத்தின்படி நமது வாழ்க்கை அமைந்திருக்கிறதா? ஜெபத்தில் வேதாகமத்தின் வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கும் அளவுக்கு வேதாகமத்தை வாசித்திருக்கிறீர்களா?
சிந்தனை : வேதத்தை உன் செவி கேட்டால் உன் ஜெபத்தையும் ஆண்டவர் கேட்பார்.
ஜெபம் : கர்த்தாவே உம் வேதத்தை நேசிக்கவும், உம்முடன் ஜெபிக்கும் நேரத்தை வாஞ்சிக்கவும் என் மனதைப் பக்குவப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment