யோவான் 5:1-15
... வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். - யோவான் 5:3
இயேசுவின் காலத்தில் தேவதூதன் வந்து பெதஸ்தா குளத்தைக் கலக்கும் போது அற்புதம் நிகழ்ந்தது. இந்தக் காலத்திலும் பல அற்புதங்கள் நடக்கும் புண்ணிய ஸ்தலங்களைப் பற்றி பல மதங்களில் கேள்விப்படுகிறோம். அவைகளில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அற்புதங்களைக் கண்டும் தன் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் முப்பத்தெட்டு வருஷங்களாகக் காத்திருந்த ஒரு மனிதன் மேல் இயேசு தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டவராக அவரிடம் போய் அவரை சுகமாக்கினார்.
வியாதி சுகமாவதற்காக எதையும் செய்யும் மக்கள் ஒருபுறம். தன்னால் எதையும் செய்ய முடியாமல் அற்புதத்தைப் பார்க்கும் தூரத்தில், உதவி செய்யவும் யாரும் இல்லாத நிலையில் இருக்கும் இந்த மனிதனுக்கு நம்பிக்கை என்பது தானாக வரமுடியாது. நம்பிக்கையே, அற்புதமே உருவெடுத்து இயேசுவாக வந்து அவன் முன்னே நிற்கும் போது அந்த மனிதனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார் இயேசு. மறுபேச்சு இல்லாமல் நடந்து சென்றான் அந்த மனிதன். அவன் உடலில் ஏற்பட்ட மாற்றம் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மதத்தலைவர்களின் மிரட்டல் அவன் பெற்றோரை நடுங்கச் செய்தது. அவனை அசைக்கவில்லை. நடனமாடவோ, கூத்தாடவோ போகாமல் தேவாலயத்தில் போய் தொழுது கொள்ளப் போனார். தேவனே கண்ணெதிரே வந்தார். இனி பாவம் செய்யாதே என்று சொன்ன இயேசுவைப் பற்றி எல்லோருக்கும் சொல்லத் துவங்கினான். இது தான் அற்புதம். உடல் சுகமானாலும் மீண்டும் வியாதியும், முதுமையும், மரணமும் வருவது நிச்சயம். ஆனால் நித்தியத்துக்கும் உயிர்தரும் மனமாற்றம் தான் உண்மையான, நிலையான அற்புதமாகும். இப்படிப்பட்ட அற்புதக் கூட்டங்கள் இந்தக் காலத்தில் அதிகரித்து வருகின்றது.
சிந்தனை : தூதர்கள் குளத்தைக் கலக்குவார்கள்; இயேசுவோ உள்ளத்தைக் கலக்குவார். வியாதியஸ்தர்கள் தூதர்களின் கலக்கல் பிரதேசத்துக்குப் போவார்கள். இயேசுவோ வியாதியுள்ள தனி மனிதனைத் தேடி வருகின்றார்.
ஜெபம் : அற்புதரே, என் உடலும் உள்ளமும் உம் அற்புதத்தை அனுபவிக்க, இனி பாவம் செய்யாதிருக்க, என்னை சுகமாக்கியவர் நீர் என்று உலகத்துக்குச் சொல்ல, என்னை பெலப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment