யோவான் 2:12-25
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். - யோவான் 2:17
எந்த ஒரு அமைப்பும் ஊழலுக்கு விலக்கானது அல்ல. திருச்சபையும் இதில் அடங்கியிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். ஆனால் வைராக்கியமுள்ளவர்களால் அவ்வப்போது திருச்சபையானது சுத்தப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
ரோமரின் பணம் யூத தேவாலயத்துக்குள் போனால் தீட்டு என்று சொன்னார்கள் யூத மத்ததலைவர்கள். அத்துடன் ஆலயத்தில் விற்கப்படும் மிருகங்களையும் பறவைகளையும் தான் தேவாலயத்தில் பலியிடவேண்டும் என்றும் அவர்கள் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள். ஆகவே ரோமக்காசுகளை யூதக்காசுகளாக்கும் வியாபாரமும், பலிகளுக்கான உயிரினங்களின் வியாபாரமும் அமோகமாக நடந்து கொண்டிருந்தன எருசலேம் தேவாலயத்தில். இப்போது தான் இயேசு தனது வைராக்கியத்தை வெளிக்காட்டினார். கயிற்றினால் சவுக்கையை உண்டுபண்ணி வியாபாரிகளையும் வியாபாரப் பொருட்களையும் தேவாலயத்தைவிட்டு அகற்றினார். ஜெபவீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் இயேசு.
இயேசு சுத்தப்படுத்திய சில காலத்திலேயே யூதாசுக்கு முப்பது வெள்ளிக்காசுகள் கொடுக்கப்பட்டு இயேசு காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் அவரை கொலை செய்வதற்கும் அந்த மதத்தலைவர்கள் திட்டம் தீட்டினார்கள். இன்று வரை எத்தனை முறை சுத்தம் செய்யப்பட்டாலும் திருச்சபையானது மீண்டும் மீண்டும் இவ்வாறு அசுத்தமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. பல தலைவர்கள் இவ்வாறு வைராக்கியத்துடன் எழும்பினாலும், மக்கள் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது ஊழல்களும், வியாபாரங்களும் நடந்து கொண்டே தான் இருக்கும். திருச்சபையின் ஆன்மீகத்தன்மையைத் தவிர உள்ளே புகுந்து கொள்ளும் வியாபாரங்களும், ஊழல்களும் விலக்கப்பட விசுவாசிகள் அனைவரும் வைராக்கியம் கொள்ள வேண்டும். வைராக்கியத்துடன் இருக்கும் ஒரு நபர் தனது சுயநலத்துக்காக அல்லாமல் திருச்சபைக்காகப் போராடும் போது பலர் பயனடைவார்கள்.
சிந்தனை : என் திருச்சபையின் வியாபாரத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கின்றேனா? அல்லது அதைத் தவிர்ப்பதில் ஒரு கருவியாக இருக்கின்றேனா?
ஜெபம் : கர்த்தரே, என் திருச்சபை மட்டுமின்றி உமது ஆலயமாகிய என் உடலும் வியாபார வீடாகாதபடி சுத்தமாகக் காத்துக்கொள்ளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment