யோவான் 3:22-36
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். - யோவான் 3:30
கம்பரின் ரசிகரான ஒரு தமிழறிஞர் தன் பெயரை கம்பர் அடிப்பொடிகள் என்று மாற்றிக்கொண்டார். அதாவது கம்பரின் காலிலுள்ள மண் துகள்கள் என்று தனது பெயரை மாற்றி கம்பர் மேலுள்ள தனது பக்தியை அவர் வெளிப்படுத்தினார். யோவான் ஸ்நானகனின் இந்த ஜெபமானது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருத்தமானது.
யோவான் பலருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தார். இயேசுவுக்கும் அவர் தான் ஞானஸ்நானம் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இப்போது இயேசுவும் பலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அதிகக் கூட்டம் இயேசுவிடம் போகிறது என்று யோவானிடம் தெரிவிக்கப்பட்ட போது யோவான் இப்படிச் சொல்கிறார். என்னால் ஞானஸ்நானம் பெற்றவன் எனக்கே போட்டியாக வந்துவிட்டானா என்று அவர் கேட்கவில்லை. தாழ்மை என்பதைவிடத் தன் வாழ்வின் பெரும் நோக்கமாக, கிறிஸ்து பெருக வேண்டும் என்கிறார் யோவான் ஸ்நானகன். இயேசுவின் பெயரால் பணத்திலும் பெயரிலும் வசதிகளிலும் பெருக நினைப்பவர்களுக்கு யோவான் ஸ்நானகன் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார். இந்த உலகத்தில் தன்னைத் தானே உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்படுவான் என்று இயேசு சொன்னார். அப்படியே, பெண்களிடத்தில் பிறந்தவர்களிலேயே யோவானைப் போல பெரியவர் யாருமில்லை என்று இயேசு சொன்னார்.
நாமும் நம்மை கிறிஸ்துவின் அடிப்பொடிகள் என்று பெயர் மாற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நமது சொல், செயல், நடக்கை ஆகியவற்றில் கிறிஸ்துவை பெருகச் செய்யவும், நம்மைச் சிறுகச் செய்யவும் பழகிக் கொள்ளவேண்டும்.
சிந்தனை : கிறிஸ்து பெருகினால் நான் சிறுகுவேன். நான் பெருகும் போது கிறிஸ்துவின் பெயர் சிறுத்துப் போய்விடும்.
ஜெபம் : கர்த்தாவே எனது சுயநலம், பெருமை போன்றவற்றை எடுத்துப் போட்டு தாழ்மையைப் பழகவும், நீர் பெருக என்னை சிறுகச் செய்கிறேன். என்னை வழிநடத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment