யோவான் 4:27-38
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். - யோவான் 4:36
விதைத்தல் என்பது நற்செய்தியைப் பிறருக்குச் சொல்வது. அறுத்தல் என்பது நற்செய்தியைக் கேட்டு மனம் திரும்பினவர்களை கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். விதைத்தல் இல்லாமல் அறுவடை இல்லை. அறுவடை இல்லாமல் விதைத்தலுக்கு அர்த்தம் இல்லை. இப்படியே ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிறருக்கு வார்த்தை, நற்செயல்கள், சிந்தனை போன்ற வழிகளில் நற்செய்தி என்னும் விதையைப் போட வேண்டும். பவுல் நட்டான் அப்பல்லோ நீர்ப்பாய்ச்சினான் தேவனே விளையச் செய்தார் என்ற வேத வசனத்தின்படி யார் மனதில் நற்செய்தி விதை போடப்பட்டதோ அவர் உடனடியாகவோ பல காலத்திற்குப் பின்போ தனது வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிப்பார். அப்போது அந்த போதகரின் சபையில் ஒரு புதிய விசுவாசி சேர்க்கப்படுவார். அவரால் அந்த திருச்சபைக்கு பல நன்மைகள் கிடைக்கலாம். இதைத் தான் இயேசு சொல்கிறார். அறுக்கிறவன் கூலியை வாங்குகிறான் என்று.
ஆனால் இதில் விதைக்கிற அறுக்கிற இருவருக்குமே சந்தோஷம் இருக்கின்றது. விதைத்தது பலன் தருவது அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகும். ஆகவே நீங்கள் சாதாரணமான ஞாயிறு பள்ளி ஆசிரியராக இருந்தாலும், உண்மையுடன் தனிநபர்களுக்கு நற்செய்தியைச் சொல்பவராக இருந்தாலும் உற்சாகமடையுங்கள். சந்தோஷப்படுங்கள் உங்கள் உழைப்பை கடவுள் பார்க்கிறார். விதை உடனடியாகப் பலன் தராவிட்டாலும் பின்னர் ஒருநாள் நீங்கள் அறுக்கிறவர்களோடு ஒருமித்து மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் உழைப்பு வீணாகப் போகாது. உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.
சிந்தனை : பெயர் தெரியாத ஒருவர் உங்கள் பெயர் தெரியாமலேயே உங்கள் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் பரலோகத்தில் உங்களுக்குப் பலன் கிடைக்கும். பெயர் யாருக்குக் கிடைத்தால் என்ன என்று நினைத்தால் பலரது பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும்.
ஜெபம் : ஆண்டவரே உண்மையுடன் பலரிடம் உம் நற்செய்தி வசனத்தை விதைக்க பொறுமையையும் உண்மையையும் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment