யோவான் 6:1-15
அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். - யோவான் 6:15
உலகத்தின் கடைசி அரசர் என்று பூட்டான் நாட்டு அரசரை சொல்லலாம். இப்போது அவர் நாட்டின் அதிபராக இருந்து மக்களாட்சியை நடத்தினாலும் மக்கள் மனதில் ராஜாவுக்கான மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது. வருங்காலத்தில் ராஜா என்றால் யார் என்பதே தெரியாமல் போய்விடும் என்றாலும், சரித்திரமும், திரைப்படங்களும் ராஜாக்களைப் பற்றி சிறிது விபரங்களைச் சொல்லும். மக்களாட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்று சொல்லப்பட்டாலும், பணக்காரர்கள் மட்டுமே அரச வாழ்க்கை வாழும் சூழ்நிலை இருக்கின்றது. இயேசு ராஜாவாக நம் வாழ்வில் இருக்க வேண்டும். ஆனாலும் எதற்காக அவரை நம் வாழ்வில் ராஜாவாக மாற்றுகிறோம் என்ற நோக்கம் முக்கியமானது.
இயேசு ராஜாதி ராஜா என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவரை ராஜாவாக்க மக்கள் வந்த போது அவர் விலகிப் போனார். காரணம், அவர்கள் அவரை தங்கள் நாட்டில் ரோமர்களை எதிர்க்கவும், தங்கள் சொந்தத் தேவைகள் சந்திக்கப்படவும்,(இலவச அப்பம், மீன், அற்புதங்கள்) தான் இயேசுவை ராஜாவாக்க நினைத்தார்களே தவிர, இயேசுவின் போதனைகளைக் கேட்டு, எதிரிகளை நேசித்து, இச்சை, கோபங்களைத் தவிர்த்து வாழ ஆயத்தமாக இல்லை. எனவே தான் அப்படிப்பட்ட அரச பதவியை ஏற்றுக் கொள்ள இயேசு விரும்பவில்லை.
மனித உள்ளங்கள் இயேசுவை அரசராக்கும் போது நாட்டை ஆளும் அரசன் யாராக இருந்தாலும் கவலையில்லை. ஏனென்றால் உலகத்தில் மக்களை ஆட்சி செய்யும் ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் அவர் தான். உலகத்தையே படைத்தவருக்கு மனிதர்களுக்கு எது நல்லது என்பது தெரியும். ஆனால் மக்களோ தங்களுக்கு எது நல்லதாகத் தெரிகிறதோ அவற்றை மட்டுமே நாடித் தேடுகிறார்கள்.
சிந்தனை : தன்னை ராஜாவக்கும்படி நம்மிடம் இயேசு வந்து நிற்கிறார். நாம் விலகிப் போகிறோமா அல்லது பதவியேற்பு விழா நடத்துகி்றோமா?
ஜெபம் : ராஜாதி ராஜாவே, என் வாழ்க்கை முழுவதற்கும் நீர் ராஜாவாக இரும். உம் மேன்மையைக் காண என் கண்களைத் திறந்தருளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment