Friday, April 20, 2012

April 21, ராத்திரி விசிட்

யோவான் 3:1-21


அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். - யோவான் 3:2


பரமானந்தம் ஐயர் என்னும் கடந்த நூற்றாண்டின் போதகர் எழுதிய கிறிஸ்துவின் ஜீவியம் என்ற சிறந்த புத்தகத்தில் நிக்கோதேமு இயேசுவை சந்தித்த சம்பவத்தை வித்தியாசமான ஒரு கோணத்தில் எழுதியிருக்கின்றார். ஒரு யூத அதிகாரி என்ற முறையில் அவரது செயல்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் இயேசுவை இரகசியமாக சந்திக்கச் சென்றார். அவர் உண்மையானவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவே பயத்தினால் அல்ல, பொறுப்பு உணர்வினால் தான் நிக்கோதேமு இரவில் இயேசுவை சந்திக்கச் சென்றார் என்கிறார் பரமானந்தம் ஐயர் அவர்கள்.

நிக்கோதேமு அறிந்திருக்கிறோம் என்று தன்னுடன் இருக்கும் பலரையும் இணைத்துச் சொல்வதிலிருந்து, பலர் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தாலும் நிக்கோதேமுவைப் போல தைரியமாக இயேசுவைப் பின்பற்ற மிகச் சிலரே இருந்தார்கள் என்று வெளிக்காட்டுகிறார். இயேசுவைப் பற்றி அறிவதை விட அவரை சந்தித்து அவரைப் பின்பற்றுவதுவே முக்கியமானது.

நம்மில் பலர் ஞாயிறு பள்ளி காலத்திலிருந்தே இயேசுவைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் அனைவருமே இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவருடன் உறவை ஏற்படுத்துவதில்லை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம், வெட்கம், தயக்கம் ஆகியவை இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் தடுத்துவிடக்கூடாது.

சிந்தனை : நிக்கோதேமு இரகசியமாக இயேசுவை சந்தித்திருந்தாலும், அவரது சீஷர்கள் அவரை விட்டுச் சென்ற கடைசி நேரத்தில் இயேசுவின் உடலை வாங்கி அடக்கம் செய்யும் அளவுக்கு நிக்கோதேமு தைரியமுள்ள இயேசுவின் சீஷனாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.


ஜெபம் : இரட்சகரே, உம்மைப் பின்பற்றவும், உம்மை என் வாழ்வில் வெளிக்காட்டவும் எனக்கு தைரியம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: