யோவான் 1:1-18
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. - யோவான் 1:1
அமெரிக்காவில் 1899 இல் நான்கு வித்தியாசமான பத்திரிக்கைகளில் செய்தியாளர்களாக இருந்தவர்கள் ஒரு மதுபானக்கடையில் ஒன்றாகக் கூடி அடுத்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு இதழுக்கான ஒரு செய்தியைத் தயாரித்தார்கள். பொய்யாக இருந்தாலும் நம்பக்கூடிய வகையில் சீனாவின் மாபெரும் சுவரை உடைத்து உலகத்துடன் சீனா வியாபார உறவைப் பெருக்கப் போகிறது என்று பத்திரிக்கையில் செய்தியை வெளியிட்டார்கள். இந்த செய்தியால் பெரும் பரபரப்பும் சீனாவில் பெரும் கலவரமும் உண்டானது. பல வெளிநாட்டு ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள். இதுவே பாக்சர் கலகம் எனப்பட்டது.
வார்த்தை என்பது பலவிதங்களில் உருவாக்குவதாக, வல்லமை உள்ளதாக இருக்கின்றது. சில சூழ்நிலைகளில் அழிக்கிறதாகவும் இருக்கின்றது. வார்த்தை என்று இயேசுவுக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது. வேதாகமத்துக்கும் வார்த்தை என்ற பெயர் உண்டு. ஆனால் உலகம் உருவாவதற்கு முன்பாகவே வார்த்தை இருந்தது என்றும், அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்றும் அது தேவனாகவே இருந்தது என்றும் யோவான் எழுதுகிறார்.
இயேசு யார் என்பதைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் வேதாகமத்தின்படி இயேசு இந்த உலகங்களையும் நம்மையும் உருவாக்கிய ஆண்டவர். அவர் ஆதியிலே இருந்தார், இப்போதும் இருக்கின்றார். எப்போதும் இருப்பார். இயேசு ஒரு சரித்திர மனுஷனாக இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இந்த உலகத்தில் பிறந்திருந்தாலும் அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே இருக்கிறவர். அவர் ஒரு மனிதனாக இந்த உலகத்தில் இருந்தாலும் கூட அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளாக இருந்து கொண்டிருக்கின்றார்.
அந்த வார்த்தையை நமக்குள் வைத்திருக்கும் போது நம் வார்த்தைகள் மாறுகின்றன. கெட்ட வார்த்தைகள் விலகுகின்றன. கொடுத்த வார்த்தைகள் காப்பாற்றப்படுகின்றன. மற்றவர்களின் நன்மைக்காகவே வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன. அந்த வார்த்தையானது வேதாகமத்தின் மூலம் நமக்குள் செல்லும் போது நமது தியானங்கள் இனிமையாகின்றன. நமது வாழ்க்கை மாற்றமடைகின்றது. நமது செயல்களுக்கான ஆதாரமாக வேதவார்த்தை இருக்கின்றது.
சிந்தனை : நம் வார்த்தையில் வல்லமை இருக்கின்றது. வல்லமையான வார்த்தையானவர் உங்களுக்குள் இருக்கின்றாரா?
ஜெபம் : இயேசுவே, உமது வார்த்தை என்னில் மாற்றங்களைக் கொண்டுவர, உம்மையே நான் எப்போதும் தொழுது கொள்ள என் தேவனாக இருந்தருளும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment