Thursday, April 19, 2012

April 19, அற்புதம்

யோவான் 2:1-11


இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். - யோவான் 2:7


இயேசு செய்த அற்புதங்களில் முதலாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த அற்புதத்தில் வேலைக்காரர்களின் பங்கு இருந்தது. நமது வாழ்விலும் இயேசு அற்புதம் செய்யும் போது நமது பங்கும் அதில் இருக்க வேண்டும். உதாரணமாக இயேசுவால் அற்புதங்கள் செய்யும் வல்லமை இருந்தாலும் பல இடங்களில் மக்களின் அவிசுவாசத்தினால் அவரால் அற்புதங்களைச் செய்ய முடியாமல் போனது என்றும், அவரது வேளை வரவில்லை என்றும், அவரைத் தங்கள் ஊரைவிட்டுப் பலர் பல சூழ்நிலைகளில் விரட்டினார்கள் என்றும் வேதாகமத்தில் பார்க்கிறோம்.

இங்கே, திராட்சைரசம் தேவைப்படும் போது, வெறும் தண்ணீரை நிரப்பச் சொல்லும் இயேசு ஒரு வித்தியாசமானவராக, புத்தியில்லாதவராகத் தோன்றியிருக்கலாம். ஆனால் வேலைக்காரர் கீழ்ப்படிந்தார்கள். பந்தி விசாரிக்கும் பெரியவரிடம் தண்ணீரை நிரப்பச் சொல்லியிருந்தால் அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படியாமல் கேலி செய்திருக்கலாம். வேலைக்காரரைப் போன்ற பணிவு, கீழ்ப்படிதல் நம்மில் இருந்தால், இயேசுவுக்கு அப்படியே கீழ்ப்படிய முழுமனம் இருந்தால் நம் வாழ்விலும் அற்புதம் நிகழலாம்.

ஆனால் இயேசு சொல்வது நமக்கும் உலகத்தின் பார்வைக்கும் முட்டாள்த்தனமாகத் தெரியலாம். உதாரணமாக ஒரு வேலை தேவையாக இருப்பவர் லஞ்சம், சிபாரிசு ஆகியவற்றைத் தேடாமல், நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னால் நம்மில் பலர் சிரிக்கத்தான் செய்வோம். ஆனால் உண்மையான இயேசுவின் சீஷர்கள், அவரது அற்புதத்தைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்க விரும்புபவர்கள், இயேசு சொல்வதை அப்படியே செய்வார்கள்.


சிந்திக்க : தண்ணீர் திராட்சை ரசமானது அற்புதம். நமது ருசியற்ற வாழ்க்கை இனிமையாக மாற இயேசு நம்மில் அற்புதம் செய்ய வேண்டும்.


ஜெபம் : அற்புதரே, என் வாழ்விலும் கீழ்ப்படிதல், தாழ்மை இவற்றின் மூலம் உம் அற்புதங்களை அனுபவிக்க உதவி செய்யும். ஆமென்.

For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: