யோவான் 4:1-26
சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். - யோவான் 4:8
ஒரு விபத்தில் இரத்தம் அதிகம் வீணானதால் ஒருவர் இறந்து போனார். ஆகவே இறந்து போனவரின் குடும்பத்தார் விபத்து நடந்த ஒரு இடத்தில் இருந்தும் அதைக் கண்டு கொள்ளாமல் போன மருத்துவர் மேல் வழக்கு தொடுத்தார்கள். நீதிமன்றம் பெரும் தொகையை அந்த மருத்துவர் இறந்து போனவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. காரணம், அவரது மருத்துவ அறிவானது அந்த இடத்தில் ஒரு உயிரைக்காப்பாற்றும் ஒரு பெரும் பொறுப்பை அவருக்குக் கொடுத்திருந்தது அவர் அதை நிறைவேற்றாததால் தான் இந்தத் தண்டனை. நாமும் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கும் போது அவரை அறியாத மக்கள் நமக்கு பெரும் பொறுப்பை நினைவுபடுத்துகிறார்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னுடன் வேலை செய்கிற, படிக்கிற பிறருக்கு நற்செய்தி சொல்ல முடியும். இயேசு பெரும் கூட்டத்துக்கு மட்டுமல்ல, சிறு குழுவுக்கும், தனி நபர்களுக்கும் நற்செய்தி சொன்னார். இயேசுவின் மாதிரியிலிருந்து நாமும் தனிநபராக ஊழியம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம்.
முதலாவதாக, நானும் உன்னைப் போல ஒரு மனிதன் தான் என்று சொல்வது அவசியம். ஆன்மீகமானது மனிதர்களின் உள்ளத்தை, மாற்றினாலும் வெளிப்புறத்தில் அடிப்படையில் நாம் அனைவரும் மனிதர்களே. நமக்கும் தாகம், பலகீனம், பசி, மகிழ்ச்சி, துக்கம் யாவும் உண்டு என்பதை அறியும் போது மக்கள் நமது செய்தியைக் கேட்பார்கள்.
இரண்டாவதாக, பிறர் வரும் இடத்தில் அவர்களை சந்திக்க வேண்டும். நாம் நற்செய்தியாளர் என்று போர்டு மாட்டிக் கொண்டு உட்கார்ந்தால் நம்மைத் தேடி மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கிறிஸ்தவர்கள் பிறரிடமிருந்து ஒதுங்கி தனிக்கூட்டமாக இருந்தால் பிறரிடம் நற்செய்தியைச் சொல்ல முடியாது.
கடைசியாக, சமாரிய மக்கள் யூதர்களுக்கு எதிரிகளாக இருந்தாலும் இயேசு சமாரியப் பெண்ணிடம் நற்செய்தியைச் சொன்னார். நமது சூழ்நிலையிலும் ஜாதி மற்றும் இன வேறுபாடுகளைத் தாண்டி அனைவருக்கும் நற்செய்தி செல்ல நமது பங்கை நாம் செய்ய வேண்டும்.
சிந்தனை : தனிநபர் ஊழியத்தில் பெரும் கூட்டத்து ஊழியத்தில் கிடைக்கும் பலன்கள், மதிப்பு, பணம் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின் பலர் இயேசுவிடம் வருவார்கள். நமக்கும் ஒருவரது வாழ்வில் சிறந்த பாதிப்பு ஏற்படுத்திய திருப்தி கிடைக்கும்.
ஜெபம் : மீட்பரே, என்னுடன் இருப்போர் மீது அன்பையும் அவர்களுக்கு உம்மைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்புக்களையும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் ஞானத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment