நீதிமொழிகள் 19
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.- நீதிமொழிகள் 19:17
ஒரு ஏழை செருப்புத்தைக்கும் சிறுவன் இயேசுவைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொண்டான். இப்போது அவன் பொய், கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. திருடுவதுவும், ஏமாற்றுவதுவும் இல்லை. நேர்மையாக உழைத்தான். அவனது நண்பர்கள் அவனிடம் ”உங்க இயேசு உனக்கு . எல்லா நன்மைகளையும் தருவார்னு சொன்னியே. இன்னும் நீ அப்படியே கிழிந்த கால்சட்டையுடன், கஞ்சி குடித்துக் கொண்டு தானே இருக்கிறாய்?” என்று கேலி செய்தனர். அதற்கு அந்தச் சிறுவன் இவ்வாறு பதில் சொன்னான், “கர்த்தர் எனக்கு உரிய பொருட்களை எல்லாம் கோயிலுக்கு வர்ற பணக்காரங்க கிட்ட குடுத்துட்டார், அவங்க தான் எனக்குத் தர மறந்துட்டாங்க.”
இந்த உலகத்தில் மக்களின் நிலை அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றது. பலர் திடீரென ஏழைகளாகின்றனர். பலர் திடீரென்று பணக்காரர்களாகின்றனர். விபத்து. வியாதி, அநீதி போன்றவைகள் நம்மைத் திடீரென்று பணம் இல்லாதவர்களாக்கிவிடுகின்றன. ஆகவே நாம் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதன் மூலம் கடவுளுக்குக் கடன் கொடுத்தால் நாம் ஏழையாகும் போது கடவுள் நமக்குத் திரும்பத் தருவார். பணத்தால் என்று மட்டுமல்ல நாம் உறவுகள் இல்லாத ஏழ்மை நிலையில் இருக்கும் போது, உதவிகள் இல்லாமல் இருக்கும் போது, ஆன்மீக வாழ்வில் தாழ்ந்து போய் இருக்கும் போது கூட இவ்வாறு கடன் கொடுக்கலாம். ஏழைகள் எப்போதும் நம்முடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும். இரக்கம் என்பது பொருட்களில் மட்டுமல்ல, செயல்களிலும் காட்டப்படலாம். அன்பான விசாரிப்பு, சிறு உதவிகள், உரையாடல்கள் போன்றவை பணம் பொருட்களை விட அதிக மதிப்புள்ளவைகளாகும்.
சிந்தனை : கடவுள் திரும்பக் கொடுப்பார் என்பதற்காக அல்ல, ஏழைகளுக்குத் தேவை இருக்கிறது என்பதற்காகவே நாம் இரக்கம் காட்ட வேண்டும்.
ஜெபம் : கர்த்தாவே, இந்த உலகத்தில் பொருளாலும், மனத்தாலும் ஏழைகளாக இருப்பவர்கள் உம்மைக் கண்டு கொள்ள உதவும். அதற்கு என்னையும் கருவியாக்கும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment