நீதிமொழிகள் 25
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். - நீதிமொழிகள் 25:21-22
ஒரு குதிரை காட்டிலுள்ள புல்தரை ஒன்றில் தான் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு மான் அந்தப் பகுதிக்கு வந்தபோது குதிரை அந்த மானைப் பழிவாங்க நினைத்து அருகிலுள்ள கிராமத்தின் விவசாயி ஒருவனிடம் உதவி கேட்டது. அந்த விவசாயி குதிரைக்கு உதவுவதாக வாக்குக் கொடுத்தான். பதிலாகத் தான் குதிரையின் மேல் சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டான். மான் விரட்டப்பட்டது ஆனால் குதிரை தன் காலம் முழுவதும் விவசாயிக்கு அடிமையாக மாறியது.
பழிக்குப் பழி என்பது மிகவும் இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறது. மேலும் தீமை செய்யப்பட்டால் பழிவாங்க வேண்டும் என்றே திரைப்படங்களும், தொலைக்காட்சியும், நமது மனிதத்தன்மையும் நமக்குக் கற்றுத்தருகின்றன. ஆனால் பழிவாங்குதலின் விளைவுகள் என்னவென்று பார்த்தால் தான் அதன் தீமை புரியும். ஒரு சீனப்பழமொழி, பழிவாங்குகிறவன் இரண்டு சவக்குழிகளைத் தோண்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறது.
வேதபுத்தகமோ பழி வாங்குவதற்கு ஒரு அருமையான வழி சொல்கிறது : உன் எதிரியை மன்னித்து அவனுக்கு நன்மை செய். இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நமது எதிரி என்று வரும்போது மன்னிப்பு என்பதுவும் நன்மை செய்வது என்பதுவும் கோழைத்தனமாகத் தெரிகின்றது. ஆனால் இயேசுவும் அவரது சீஷர்களும் இதே வழியில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் மன்னிக்கப்படும் போது நமது எதிரி அழிந்து அதே நபர் நமது நண்பராக மாறுவதால் நம் மனதில் இருக்கும் வெறுப்பு, கசப்பு ஆகியவை வெளியேறி நாமும் சுத்த மனதுடன் சிறப்பான சிந்தனைகளையும் வேலைகளையும் செய்ய முடியும்.
சிந்தனை : நண்பர்களை எதிரியாக்கும் இந்த உலகத்தில் எதிரிகளை நண்பர்களாக்குவது கடினமானது தான். ஆனால் நம் மனம் அமைதியாக இருக்க வேண்டுமானால், எதிரி ஏற்றுக் கொண்டாலும் இல்லையென்றாலும் மன்னித்து அவர்களுக்காக ஜெபிப்பது இயேசு காட்டிய வழியாகும்.
ஜெபம் : அன்பின் ஆண்டவரே, உம்மைப் போல எதிரிகளை அன்பால் பழிவாங்க, மன்னிப்புடன் நன்மையும் செய்ய எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment